திட்டக்குடி பகுதி கடைகளில் 200 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை
திட்டக்குடி பகுதி கடைகளில் 200 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திட்டக்குடி,
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தட்சணாமூர்த்தி தலைமையில் துறை அலுவலர்கள் நல்லத்தம்பி, சுப்பிரமணியன், அன்பழகன், சரவணக்குமார், சின்னமுத்து ஆகியோர் திட்டக்குடி பஸ்நிலையம், பெருமுளை சாலை, பெரியார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழக்கடைகள், மளிகை கடைகள், இனிப்பகம் போன்ற கடைகளில் திடீரென ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ் நிலையம் அருகில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கடை உரிமையாளர்களிடம், இனி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் டீக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு காலாவதியான பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைக்காரர்களை எச்சரித்தனர்.