உப்பாற்றில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டியதால் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரிசெய்யும் வழிகள் என்னென்ன? அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு

உப்பாற்றில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரிசெய்யும் வழிகள் என்னென்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-02-05 22:54 GMT

மதுரை,

நெல்லையை சேர்ந்த முத்துராமன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

தூத்துக்குடி மீளவிட்டான் கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலை கழிவுகளை அகற்றும்போது முறையான தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதியுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம், ஆயிரக்கணக்கான டன் கழிவுகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், தூத்துக்குடி உப்பாற்றில் கொட்டி உள்ளனர். இதே அளவு கழிவுகளை தனியார் பட்டா நிலத்திலும் கொட்டி வைத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரும் புகார் அளித்து இருந்தால், மாசுக்கட்டுப்பாடு மற்றும் தடுப்புச்சட்டத்தின்படி வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும். ஆனால் அவர்கள் புகார் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே மாசுக்கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனம் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் உப்பாற்றில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டியதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், ஆலை கழிவுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரிசெய்யும் வழிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 20–ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் செய்திகள்