கடலாடி அருகே 2 மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு சிறுமி கொலையில் முடிந்தது, பெண் கைது
2 மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சினை சிறுமி கொலையில் முடிந்தது. அந்த சிறுமியை உருட்டுக்கட்டையால் தாக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.
சாயல்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல். அவருடைய மனைவி அழகுமீனாள். இவர்களது மகன் மருது (வயது 9), மகள் விஜயலட்சுமி (7). அதே பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மனைவி மணிமலர், மகன் செல்வராஜ்.
சிறுவர்களான மருதுவும், செல்வராஜும் அங்குள்ள தொடக்க பள்ளிக்கூடத்தில் 4–வது வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விளையாடிய போது ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருது தனது பெற்றோரிடம் தெரிவித்தான். இதன் காரணமாக 2 மாணவர்களின் குடும்பத்தினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சில நாட்களுக்கு முன்பு மருதுவின் பெற்றோர், மாணவன் செல்வராஜின் வீட்டுக்கு சென்று கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்துன்று கடைக்கு சென்று மிட்டாய் வாங்கி விட்டு மருதுவின் தங்கை விஜயலட்சுமி, செல்வராஜின் வீட்டு வழியாக சென்றுகொண்டு இருந்தாள்.
இதை கவனித்த செல்வராஜின் பெரியம்மா சந்திரா (28), ஏற்கனவே இருந்த விரோதம் காரணமாக ஆத்திரம் அடைந்து சிறுமியை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை தடுத்து, சிறுமியை மீட்டனர்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சிறுமியை உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதையடுத்து கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன், கொலை வழக்கு பதிவு செய்து சந்திராவை கைது செய்தார்.
2 மாணவர்கள் தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கி சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.