தி.மு.க. நடத்திவரும் ஊராட்சி சபை கூட்டத்தால் ஆளுங்கட்சிக்கு பயம் மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. நடத்தி வரும் ஊராட்சி சபை கூட்டத்தால் ஆளுங்கட்சி பயம் ஏற்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2019-02-05 23:30 GMT

மானாமதுரை,

திருப்புவனத்தை அடுத்த கீழடியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பின்னர் மானாமதுரையில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. வரவேற்றார். இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, தென்னவன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

வாக்குச்சாவடி முகவர்கள் ஆர்வத்தோடும், எழுச்சியோடும் வந்துள்ளதை பார்க்கும் போது மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அர்ச்சுனனுக்கு பறவை மட்டும் எப்படி தெரிந்ததோ, அதேபோன்று தி.மு.க. தொண்டனுக்கு வெற்றி மட்டுமே தெரிய வேண்டும். தி.மு.க. நடத்தும் ஊராட்சி சபை கூட்டத்தால், ஆளும் கட்சிக்கு பயம் ஏற்பட்டுள்ளது. நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது மகளிர் சுயஉதவிக்குழுவை ஏற்படுத்தினேன். மருத்துவ காப்பீடு திட்டத்தை ஏற்படுத்தியது தி.மு.க. தான். தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடத்தில் சொல்ல வேண்டும். அண்ணா கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கற்று கொடுத்தார். தற்போதைய ஆட்சி கலெக்சனை முன்நிறுத்தி செயல்படுகிறது. ஜெயலிதாவின் மரணம் குறித்த உண்மையை தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வெளிகொணரும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியவரே அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருக்கிறார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமர் மோடி பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார். எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலில் விழுந்து ஆட்சிக்கு வந்தார். மேலும் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்து தி.மு.க. ஆட்சி அமைக்கும் சூழ்நிலை வந்தாலும், கொல்லைப்புறமாக ஆட்சி அமைக்காது. முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும். நாடாளுன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்த வேண்டும் அல்லது ஒட்டுமொத்த சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாத்துரை, சுப.மதியரசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகுசுந்தரம், வக்கீல் பாலசுப்பிரமணியன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கதிர்வேல்முருகன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் மதன்குமார், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ஆர்.பி.லிங்கம், தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சோமத்தூர் பிரபாகரன், ஊராட்சி செயலாளர் ரவிசங்கர், கீழமேல்குடி சேது, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சேகர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்புராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்