தொகுதி பங்கீடு பற்றி இன்னும் பேசவில்லை: தி.மு.க. கூட்டணி ரகசியமானது அல்ல இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

அ.தி.மு.க.வைப் போல் தி.மு.க.வின் கூட்டணி ரகசியமானது அல்ல. தொகுதி பங்கீடு பற்றி இன்னும் பேசவில்லை என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாள முத்தரசன் தெரிவித்தார்.

Update: 2019-02-05 23:30 GMT

விருதுநகர்,

விருதுநகர் அருகே ஆர்.ஆர் நகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன் மேலும் கூறியதாவது:–

பாரதீய ஜனதா அரசு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. அரசியல் அமைப்பு சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட அமைப்பான திட்ட கமி‌ஷனை ரத்து செய்து விட்டது. தேர்தல் ஆணைய செயல்பாடுகளிலும் ரிசர்வ் வங்கி நிர்வாகத்திலும் தலையிட தொடங்கிவிட்டது. கடந்த 4½ ஆண்டுகளில் எவ்வித வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் தற்போது இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மரபுகளை மீறி ஒரு முழு நிதி நிலை அறிக்கையை போல பல்வேறு கவர்ச்சியான திட்டங்களை அறிவித்துள்ளது.

தெனாலிராமன் புல்லைக் காட்டியே பந்தயத்தில் குதிரையை வெற்றி பெறச் செய்ததை போலவே நவீன தெனாலிராமனாக பிரதமர் மோடி கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்துள்ளார். தமிழகத்தை பொறுத்தமட்டில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசு சொல்வதை அப்படியே செயல்படுத்தி வருகிறார். கிளிப்பிள்ளையாக உள்ளார். மத்திய அரசை எதிர்க்கவோ மாநில அரசின் உரிமைகளை காப்பாற்றவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்க தயாரில்லை.

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் எந்த நீதிமன்றத்திலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை கொலை வழக்கில் கூட 90 நாட்களில் ஜாமீன் வழங்கப்பட்டு விடும். கொடநாடு வழக்கிலும் கூட ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களை காப்பாற்றத்தான் நிர்மலா தேவி உள்பட 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை. நிர்மலா தேவி மாணவிகளை யாருக்காக அழைத்தார் என்பது பற்றி விசாரணை நடத்தப்படவில்லை. வழக்கில் முறையாக விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் கடந்த 3 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். தமிழக அரசு 8–ந்தேதி தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கையில் பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிப்பதுடன், பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பட்டாசு ஆலை பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து மாபெரும் போராட்டத்தை நடத்தும்.

அ.தி.மு.க.வைப் போல் தி.மு.க. கூட்டணி ரகசியமானது அல்ல. பகிரங்க கூட்டணிதான். வலுவான கூட்டணி. தொகுதி பங்கீடு பற்றி இன்னும் பேச்சு தொடங்கவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் துரைமுருகன் தலைமையிலான தி.மு.க. குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நவீனத்தை வரவேற்கிறது. போற்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது. அதனால்தான் 21 எதிர்க்கட்சிகள் இணைந்து வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது. ஒப்புகை சீட்டு தரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேற்கு வங்க முதல்–அமைச்சர் மம்தா பானர்ஜி சி.பி.ஐ–யை எதிர்த்து போராட்டம் நடத்துவதை போல தமிழகத்திலும் போராட்டம் நடத்த வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதை அவர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் சொல்லவேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வருகிற 27–ந்தேதி கோவை வ.உ.சி திடலில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்தியாவை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற கோ‌ஷத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மு.க. ஸ்டாலில், கே.எஸ். அழகிரி, வைகோ, தொல்.திருமாவளவன், வீரமணி, காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

மேலும் செய்திகள்