பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் முதல் அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டுள்ள பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி விருதுநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முதல் அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2019-02-05 23:00 GMT

விருதுநகர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் முதல்–அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 மாத காலமாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆலைகளில் நேரடியாகவும் பட்டாசு தொழிலை சார்ந்து மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றுள்ள 8 லட்சம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுமே பட்டாசு ஆலைகளில் வேலை பார்த்துவந்த நிலையில் தற்போது வேலையில்லாததால் உணவுக்கே வழியின்றி திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகாசி பகுதியில் மற்ற தொழில்களும், கட்டுமான பணியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பட்டாசு தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் எப்போது நடைபெறும் என்றே இன்னும் தீர்மானிக்கப்பட வில்லை. சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையே பட்டாசு தொழிற்சாலை மூடப்பட்டதற்கான அடிப்படை காரணமாகும் இந்நிலையில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை பட்டாசு தயாரிப்புக்கு பேரியம் நைட்ரேட் தவிர வேறு மாற்று பொருள் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆனால் பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பட்டாசு தொழில் பெருமளவு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு பாரம்பரியமான பட்டாசு தொழிலை பாதுகாக்கவும் இதனை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரி சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் மேலும் பட்டாசு ஆலைகள் செயல்படுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 மாதகாலமாக வேலையில்லாமல் தவித்துவரும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்