ஓசியில் பிரியாணி கேட்டு தொந்தரவு செய்ததால் தொழிலாளி அடித்து கொலை ஓட்டல் உரிமையாளர் கைது

தாராபுரத்தில் தினமும் ஓசியில் பிரியாணி கேட்டு தொந்தரவு செய்த தொழிலாளியை அடித்து கொலை செய்த ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-06 00:00 GMT

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதுமஜீத்தெருவில் தண்ணீர் குழாய் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்மணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் தலையில் பலத்த காயம் இருந்தது. அவரை மர்ம ஆசாமிகள் கட்டையால் தாக்கி இருப்பதும், இதனால் தலை உடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், தாராபுரம் அகமுடையர் தெருவை சேர்ந்த சரவணன் (வயது 46) என்று தெரியவந்தது. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு லதா என்கிற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு மவுலீஸ்வரன் என்ற மகன் உள்ளது. இதற்கிடையில் திருமணமான 2–வது ஆண்டிலேயே கணவன்–மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து லதா, தனது மகன் மவுலீஸ்வரனை அழைத்துக்கொண்டு தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகு லதா வேறு ஒருவரை 2–வது திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சரவணன் 2–வது திருமணம் செய்து கொள்ளாமல் தாராபுரத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். கூலிவேலை செய்துவந்த சரவணன், மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால், தினமும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் சரணவன் கட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மர்ம ஆசாமி, இவரை கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சரவணனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர்.

இதற்கிடையில் சித்ராவுத்தன்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர், தாராபுரம் போலீஸ் நிலையம் வந்து, கொலை தொடர்பாக, தன்னிடம் ஒருவர் வந்து சரணடைந்ததாக கூறி, அவரை போலீசில் ஒப்படைத்தார். அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் தாராபுரம் சீதாநகரை சேர்ந்த பாபு என்கிற முகமது ரபீக் (40) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். பழைய நகராட்சி அலுவலகத்திலிருந்து புதுமஜீத்தெருவுக்கு செல்லும் வழியில், சந்துக்கடை பிரியாணி என்ற பெயரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

இவருடைய பிரியாணி கடைக்கு சரவணன் தினமும் மதுகுடித்துவிட்டு சென்று, ஓசியில் பிரியாணி கேட்டு தொந்தரவு செய்வதும், பிரியாணி தரமறுத்தால் கடையில் உள்ளவர்களிடம் தகராறு செய்வதும், கடைக்கு முன்பு நின்று கொண்டு, கடைக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டும் வந்துள்ளார். இதனால் முகமது ரபீக்குக்கு வியாபாரம் பாதித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் முகமது ரபீக்கின் பிரியாணி கடைக்கு சென்ற சரவணன், கடைக்கு முன்பாக நின்று கொண்டு, கடைக்கு வரும் வாடிக்கையாளரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது முகமது ரபீக் குறுக்கிட்டு சரவணனை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார்.

அங்கிருந்து சென்ற சரவணன் சிவியார் தெருவிற்கு சென்று அங்கிருந்த இரும்புக்கடை அருகே, ரோட்டில் படுத்துக் கிடந்தார். முகமது ரபீக் வியாபாரத்தை முடித்துவிட்டு, தினமும் தன்னிடம் தகராறு செய்யும் சரவணனை மிரட்டுவதற்காக, கடையில் இருந்த விறகு கட்டையை எடுத்துக் கொண்டு சரவணனை தேடி அலைந்துள்ளார். அப்போது இரும்புக்கடை அருகே சரவணன் படுத்திருப்பது தெரிந்து, முகமது ரபீக் அங்கு சென்று சரவணனை எழுப்பி மிரட்டியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரம் அடைந்த முகமது ரபீக் கையில் வைத்திருந்த விறகு கட்டையால் சரவணனின் தலையில் பல இடங்களில் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் உயிருக்கு பயந்து முகமது ரபீக்கிடமிருந்து தப்பி, புதுமஜீத் தெருவுக்குள் ஓடியுள்ளார். பிறகு அங்கிருந்த தண்ணீர் குழாய் அருகே திடீரென்று விழுந்த சரவணன் அங்கேயே இறந்துபோனார்.

சரவணன் குடிபோதையில் விழுந்துவிட்டதாக நினைத்து, முகமது ரபீக் விறகு கட்டையை அதே இடத்தில் போட்டுவிட்டு. கடைக்குச் சென்று தூங்கிவிட்டார். பின்னர் நேற்று காலை விழித்து எழுந்தபோது சரவணன் இறந்துகிடக்கும் தகவல் அறிந்து கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று சரணடைந்தது தெரியவந்தது.

இதையடுத்து முகமது ரபீக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாராபுரத்தில் விறகு கட்டையால் தொழிலாளியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்