கஜா புயலால் காணாமல் போன ரேஷன்கார்டு, நலவாரிய அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும்

கஜா புயலால் காணாமல் போன ரேஷன்கார்டு, நல வாரிய அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று கட்டிட உடலுழைப்பு தொழிலாளர் நல சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-02-05 22:45 GMT
தஞ்சாவூர்,

தாய்திருநாடு கட்டிட உடலுழைப்பு தொழிலாளர்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினர். பொருளாளர் மல்லிகா, இணை செயலாளர்கள் ராமசாமி, பன்னீர்செல்வம், துணைத்தலைவர் விஸ்வநாதன், மகளிரணி உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் சட்ட ஆலோசகர்கள் வக்கீல்கள் அன்பரசன், ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து நல வாரிய தொழிலாளர்களுக்கும் நலவாரியத்தின் மூலம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் புயலால் சேதமடைந்த, காணாமல் போனவர்களுக்கு மாற்று ரேஷன் கார்டு, நலவாரிய அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

நலவாரியத்தில் பதிவு செய்யவும், 5ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவினை புதுப்பிக்க மட்டுமே தொழிலாளர்கள் நேரில் வர வேண்டும். மற்ற அனைத்திற்கும் தொழிற்சங்கம் மூலமே கேட்புமனுக்களை பெற வேண்டும். நலவாரியத்தில் விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு பென்ஷன் நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும். நலவாரிய பதிவுக்கு கிராம நிர்வாக அதிகாரியின் கையெழுத்து வாங்க வேண்டும் என்ற முறையை ஒழிக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான விண்ணப்ப மனுக்களை பெறவேண்டும். நலவாரியத்தில் வழங்கப்படும் நிதி உதவிகளை உயர்த்தி வழங்க வேண்டும். பெண்களுக்கு 54 வயது முதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

மாட்டு வண்டியில் மணல் அள்ளி பிழைப்பு நடத்தும் தொழிலாளர்களுக்கு தனியாக டோக்கன் வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு வழி வகுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் மாவட்ட மகளிரணி செயலாளர் லலிதா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்