பணிபுரியும் பெண்களுக்கான பாலியல் தொல்லை பிரச்சினையை தீர்க்க குழு கலெக்டர் ஷில்பா தகவல்

பணிபுரியும் பெண்களுக்கான பாலியல் தொல்லை பிரச்சினையை தீர்க்க குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

Update: 2019-02-05 22:30 GMT
நெல்லை, 

பணிபுரியும் பெண்களுக்கான பாலியல் தொல்லை பிரச்சினையை தீர்க்க குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

ஆய்வு கூட்டம் 

பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை களைவதற்கு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சமூகத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆரோக்கியமான சூழலுடன் பணிபுரிவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லை தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவின் தலைவராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் செயல்படுவார். குழு உறுப்பினர்களாக மாவட்ட சமூக நல அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆகியோர் செயல்படுவார்கள். மேலும் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் உறுப்பினராக செயல்படுவார்.

பெண்களை கேலி செய்வது, மறைமுகமாக பேசுவது, பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் போன்றவற்றை பெண்கள் இந்த குழுவிற்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரியப்படுத்த வேண்டும். சகபெண் ஊழியருக்கு இதுபோன்ற தொல்லைகள் ஏற்பட்டாலும் தகவல் தெரியப்படுத்த வேண்டும்.

துறைவரியான நடவடிக்கை 

பெண்கள் தெரியப்படுத்தும் புகார்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். புகார்கள் மீது ஒருவார காலத்திற்குள் தீர்வு காணப்படும். மேலும், விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு குற்றத்திற்கு ஏற்ப அவர் மீது துறைவரியான நடவடிக்கை மற்றும் வேலை இழப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். மேலும், விசாரணையின் போது போலியான புகார் என கண்டு பிடிக்கப்பட்டால், புகார் செய்த பெண் அலுவலர் மீதும் துறை வாரியான நடவடிக்கை போன்ற கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டால் காலதாமதம் இல்லாமல் உடனடியாக குழுவிற்கு தெரியப்படுத்த வேண்டும். புகார்கள் அனைத்தும் எழுத்து பூர்வமாகவும் ஆவணம் செய்து, பாதுகாக்கப்படும் என தெரிவித்தார். புகார்களை 99944 35418, 75981 88558, 74026 08424, 94442 74700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும். icctnv@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம்.

 இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ்குமார்(பொது), பேச்சியம்மாள்(சத்துணவு), மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா, மாவட்ட சமூக நல அலுவலர் சரஸ்வதி உள்பட பெண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்