கர்நாடகத்தில் ஆட்சியை கலைக்க முயற்சி: 20 காங். எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தலா ரூ.50 கோடி பேரம் - சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் கூட்டணி அரசை கலைக்க முயற்சி செய்து வரும் பா.ஜனதா, காங்கிரசை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.50 கோடி தருவதாக பேரம் பேசுகிறது என்று சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.

Update: 2019-02-05 00:36 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இதில் கூட்டணி கட்சியான காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். அவர்களை ‘ஆபரேஷன்’ தாமரை திட்டத்தின் மூலம் தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்க அவ்வப்போது பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு அடிக்கடி சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ், சங்கர் ஆகியோர் திரும்ப பெற்றனர். அத்துடன் மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட சில காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய முயற்சி செய்தனர்.

இதனால் கூட்டணி ஆட்சியில் சலசலப்பு உருவானது. இதைதொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் காங்கிரசை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா ஆகிய 4 பேர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் அவர்கள் 4 பேருக்கும் விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி நோட்டீசு அனுப்பியது. அதற்கு 4 பேரும் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை எனக் கூறி அவர்களை நேரில் ஆஜாராகி விளக்கம் அளிக்க காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டது.

ஆனால் அவர்கள் நேரில் ஆஜராகியும் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், சபாநாயகர் மூலம் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை(புதன்கிழமை) பெங்களூருவில் உள்ள விதானசவுதா கட்டிடத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்தொடரில் கூட்டணி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக காங்கிரசை சேர்ந்த 20 எம்.எல். ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கவும், பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருக்க செய்யவும் பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா தலா ரூ.50 கோடி பேரம் பேசி வருவதாக கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கொப்பலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதாவினருக்கு ஆட்சி அதிகார பைத்தியம் பிடித்துவிட்டது. கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா தலா ரூ.50 கோடி(மொத்தம் ரூ.1,000 கோடி) தருவதாக பேரம் பேசுகிறது. இந்த பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?. ஒரு வாரம் அரியானாவில் நட்சத்திர ஓட்டலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்தனர். அதற்கு எங்கிருந்து பணம் வந்தது?.

பொதுமக்கள் வரியாக செலுத்திய பணத்தை பா.ஜனதாவினர் கொள்ளையடித்து உள்ளனர். மீண்டும் கொள்ளையடிக்க ஆட்சி அதிகாரம் வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் ஆட்சிக்கு வர முயற்சித்து வருகிறார்கள். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்