ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கேண்டீனில் சாப்பிட்ட 4 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கேண்டீனில் சாப்பிட்ட மாணவிகள் 4 பேருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-04 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் லேப் டெக்னீஷியன் பிரிவில் பயிற்சி பெற்று வரும் 4 மாணவிகள் நேற்று ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கேண்டீனில் காலை உணவு சாப்பிட்டனர். இவர்களில் 2 மாணவிகள் வீட்டில் இருந்து இட்லி கொண்டு வந்தனர். மேலும் 2 மாணவிகள் கேண்டீனில் பொங்கல் மற்றும் சாம்பார் வாங்கினர். இந்த உணவுகளை 4 மாணவிகளும் பகிர்ந்து உண்டுள்ளனர்.

ஆனால் உணவு அருந்திய சிறிது நேரத்தில் மாணவிகள் 4 பேருக்கும் திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதில் 2 மாணவிகளுக்கு வயிற்று போக்கும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக அங்கேயே அனுமதிக்கப்பட்டனர்.

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கேண்டீனில் உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேண்டீனில் உள்ள சாம்பாரை சாப்பிட்டதால் தான் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது என்று தகவல் பரவியது. ஆனால் கேண்டீனில் சாப்பிட்ட மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் 2 மாணவிகள் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவால் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ? என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்