பெரியா பஸ் நிலையம் மூடல்: எல்லீஸ் நகர் உள்ளிட்ட பகுதியில் தற்காலிக கடைகள் வைக்க தடை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு
பெரியார் பஸ் நிலையம் மூடப்பட்டு விட்ட நிலையில் மதுரை எல்லீஸ்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தற்காலிக கடைகள் வைக்க தடை விதித்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை,
மதுரையில் மாநகர போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நேற்று தொடங்கியது. வருகிற 10–ந் தேதி வரை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் அழகர்கோவில் ரோட்டில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தொடங்கியது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன்தேவாசீர்வாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் மாவட்ட நீதிமன்றம், அண்ணாநகர், தெப்பக்குளம், முனிச்சாலை, கீழவெளிவீதி, தெற்குவெளிவீதி, வடக்கு வெளிவீதி, நெல்பேட்டை, புதுபாலம், கோரிப்பாளையம், கோகலே ரோடு வழியாக கமிஷனர் அலுவலகத்தை வந்தடைந்தது.
விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார், ஊர்காவல் படையினர் உள்பட 100–க்கும் மேற்பட்டவர்கள் அனைவரும் தலைகவசம் அணிந்து கொண்டு சென்றனர். அவர்கள் தலைகவசம் அணிவது, சாலை விதிகளை பின்பற்றுவது, சாலைகளில் பாதசாரிகள் பின்பற்ற வேண்டியவை, போக்குவரத்து விதிமுறைகள் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை கமிஷனர் அருண்பாலகோபாலன், உதவி போக்குவரத்து கமிஷனர்கள் ஜோசப்நிக்சன், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் போலீஸ் கமிஷனர் டேவின்சன்தேவாசீர்வாதம் கூறியதாவது:–
மதுரையில் கடந்த டிசம்பர் மாதம் விபத்தில்லா டிசம்பர் மாதம் என்ற பெயரில் சாலை பாதுகாப்பு பிரசாரம் தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜனவரி மாதம் மரண விபத்தில்லா மதுரை நகரம் என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசாரம் கடைபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது 60 சதவீத விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது. பெரியார் பஸ்நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனமாயமாக்கப்படுவதை யொட்டி பஸ்நிலையம் மூடப்பட்டு விட்டது.
எனவே அந்த பகுதியில் 9 இடங்களில் தற்காலிக பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டு செயல்படுகிறது. பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து காலி செய்த சிறிய பெட்டிக் கடைகள் அனைத்தும் தற்போது எல்லீஸ்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிகமாக சாலை ஓரங்களில் வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த கடைகளை உடனே அங்கிருந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு கடைகள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் குற்ற வழக்குகளை விசாரிக்கும் போலீசார் பல்வேறு பணிகளுக்கு செல்வதால் அதில் தொய்வு ஏற்படுகிறது. எனவே அங்கு கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் குற்றப்புலனாய்வு வழக்கை விசாரிக்கும் தனி புலன் விசாரணை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செல்லூரில் நடந்த கொலையில் மம்தாபீவி கொலையில் 3 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களை ஓரிரு நாட்களில் கைது செய்து விடுவோம். மற்றொரு மூதாட்டி ஆண்டாள் கொலையில் உறவினர்கள் மீது சந்தேகம் உள்ளது. தேர்தலையொட்டி போலீஸ்நிலையம், இன்ஸ்பெக்டர், உதவி கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெகுநாட்களாக பணியாற்றும் ரைட்டர்களை இடமாற்றம் செய்வது குறித்த கணக்கெடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.