தலைமை ஆசிரியை இடமாற்றத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு
தலைமை ஆசிரியை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 300–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் தலைமை ஆசிரியை காளீஸ்வரியை இடமாற்றம் செய்து மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி உயர்வுக்கு காரணமாக இருந்த தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும், உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழுவினர் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
பள்ளியின் தலைமை ஆசிரியை காளீஸ்வரி கடந்த 10 ஆண்டுகளாக தலைமை ஆசிரியை பொறுப்பை ஏற்று திறம்பட செயல்பட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து பள்ளி மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியும், திறம்பட மாணவர்களையும், பள்ளியையும் வழிநடத்தி வருகிறார்.
35 மாணவர்களுடன் தொடங்கிய இந்த பள்ளியை, இவரின் முயற்சியால் தற்போது 380–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதுபோல பல வழிகளில் பள்ளியின் தரத்தை உயர்த்தியுள்ளார். இந்த நிலையில் அவரை பணியிடம் மாற்றம் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி அவரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் அவர் இங்கேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.