முன்விரோதம் காரணமாக தகராறு, அனுமன்சேனா பிரமுகருக்கு பீர்பாட்டில் குத்து
அனுமன்சேனா பிரமுகரை பீர்பாட்டிலால் குத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இடிகரை,
கோவை ரத்தினபுரி அருகே கண்ணப்பநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் விஜயகுமார்(வயது 21). இவர் அகில பாரத அனுமன்சேனா கவுண்டம்பாளையம் பகுதி இளைஞர் அணி பொறுப்பாளராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு கருப்பராயன் கோவில் வழியாக நடந்து சென்றார்.
அப்போது அங்கு நின்று பேசிக்கொண்டு இருந்த 4 வாலிபர்களுக்கும், விஜயகுமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த 4 வாலிபர்களும் சேர்ந்து அங்கு கிடந்த பீர் பாட்டிலை உடைத்து விஜய குமாரின் கழுத்து மற்றும் முகத்தில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய விஜயகுமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்த தகவலின் பேரில் சாய்பாபாகாலனி போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவர் கொடுத்த புகாரின் பேரில், கீரணத்தம் பகுதியை சேர்ந்த சேக் முகமது(19), கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த பாசில்(21), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அருண்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கீரணத்தத்தை சேர்ந்த மணி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் விஜயகுமாரை பீர்பாட்டிலால் குத்தியது தெரிய வந்தது.