தனியார் விடுதியில் ‘கேசினோ ராயல்’ சூதாட்டம் - 20 பேர் கைது, ரூ.1 லட்சம் பறிமுதல்
பந்தலூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ‘கேசினோ ராயல்‘ சூதாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பந்தலூர்,
இந்தியாவில் ‘கேசினோ ராயல்‘ என்ற சூதாட்டம் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்த சூதாட்டம் கோவா, சிக்கிம் போன்ற சில மாநிலங்களில் மறைமுகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஊட்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ‘கேசினோ ராயல்‘ சூதாட்டம் நடைபெற்றது. அதில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பந்தலூர் பழைய பஸ் நிலையம் முன்பு உள்ள ஒரு தனியார் விடுதியில் ‘கேசினோ ராயல்‘ சூதாட்டம் நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியாவுக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் தலைமையில் ஏட்டுகள் சந்திரன், பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ‘கேசினோ ராயல்‘ சூதாட்டம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விடுதியின் செயலாளர் கணபதியப்பன்(வயது 62), நிர்வாகி சானு(37), கூடலூர் 1-ம் மைல் பகுதியை சேர்ந்த சித்திக்(48), தேவாலா பகுதியை சேர்ந்த அம்சா(61), அபுபக்கர்(48), ஓவேலியை சேர்ந்த கமலதாசன்(49), ஸ்ரீதரன்(38), உப்பட்டியை சேர்ந்த முத்துராஜ்(35), பாக்கனா செய்தலவி (70), புளியம்பாராவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (35), 10-ம் நெம்பர் ஆதிவாசி காலனியை சேர்ந்த சந்திரன், பந்தலூரை சேர்ந்த சுரேஷ்குமார்(49), அவினாசியை சேர்ந்த தட்டல், உசைன்(48), யூசப்(40), யோகேஸ்வரன் (40), மாறன்(37), கபீர்(40), கருணாகரன்(48), இந்திரன்(40) ஆகிய 20 பேரை கைது செய்தனர்.
மேலும் சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 200 காயின்கள், 6 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.99 ஆயிரத்து 110 உள்ளிட்டவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து தேவாலா போலீசார் கூறும்போது, ‘கேசினோ ராயல்‘ சூதாட்டத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்றனர்.