நாடாளுமன்ற தேர்தல், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும்

நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு தேவேகவுடா வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2019-02-03 23:49 GMT
பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் (மார்ச்) வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காங்கிரசில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

குறிப்பாக கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் ஏற்கனவே அறிவித்தன.

கர்நாடகத்தில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் தங்களது கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 12 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்திடம் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஹாசன் மற்றும் மண்டியா நாடாளுமன்ற தொகுதிகளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது.

ஆனால் அந்த 2 தொகுதிகளில் ஏதாவது ஒன்றை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் வற்புறுத்துகிறார்கள். இதனால் தொகுதிகளை ஒதுக்குவதில் காங்கிரஸ் திணறி வருகிறது.

ஹாசன் மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் மந்திரி ஏ.மஞ்சு, ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு எதிராக கடுமையாக பேசி வருகிறார். அவரை பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்