காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசை ஆதரிக்காவிட்டால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும்
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் கூட்டணி அரசை ஆதரிக்காவிட்டால், கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய மந்திரி சதானந்தகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-
கர்நாடகத்தில் அரசியல் நிலையை பார்த்தால், பா.ஜனதா ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை பா.ஜனதா எடுக்க வேண்டியுள்ளது. நேரம் வரும்போது, அதற்கான முடிவு எடுக்கப்படும்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை ஆதரிக்காவிட்டால், கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும். அவரவர்களின் கோட்டைக்குள், இதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மாயமாகிவிட்டனர். அவா்களை கண்டுபிடிக்க காங்கிரசால் முடியவில்லை. இத்தகையவர்கள் எப்படி ஆட்சியை நடத்த முடியும்?. ரவுடி ரவிபூஜாரியை கைது செய்துவிட்டதாக குமாரசாமி பெருமை கொள்கிறார்.
ஆனால் ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வை தாக்கிய கணேஷ் எம்.எல்.ஏ.வை இன்னும் பிடிக்க முடியவில்லை. இந்த எல்லா சூழ்நிலைகளையும் கவனித்தால், மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பா.ஜனதாவுக்கு உள்ளது.
மத்திய பட்ஜெட்டை, தேர்தல் பட்ஜெட் என்று குமாரசாமி விமர்சிக்கிறார். அவர் எத்தகைய பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போகிறார் என்பதை நாங்கள் பார்க்கிறோம். பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா? என்பது எனக்கு தெரியவில்லை.
அத்தகைய ஒரு நிலை கூட்டணி கட்சிகளில் உருவாகியுள்ளது. சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் பீதியடைந்துள்ளது.
பெங்களூரு வடக்கு தொகுதியில் தேவேகவுடா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. தேவேகவுடா நின்றாலும், அவருக்கு எதிராக நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். போட்டி போட்டால், பலமான தலைவருடன் போட்டிப்போட வேண்டும். எனது முகத்தில் நீங்கள் தோல்வி பயத்தை கண்டால், அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெங்களூரு வடக்கு தொகுதியில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது. அதை சரிசெய்துகொண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு சதானந்தகவுடா பேசினார்.
கர்நாடக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.சி. பேசுகையில், “மோடி மீண்டும் பிரதமராக வேண்டுமென்றால் நாம் அனைவரும் அடுத்த 3 மாதங்களுக்கு முழு நேரம் கட்சிப்பணியாற்ற வேண்டும்.
மோடி தினமும் 18 மணி நேரம் உழைக்கிறார். பா.ஜனதாவுக்கு எதிராக திருடர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்” என்றார்.