கடலூரில் 5 ஆண்டுகளாக தேடப்பட்ட சாராய வியாபாரி, கூட்டாளியுடன் கைது
5 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சாராய வியாபாரி, புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்த போது, கூட்டாளியுடன் போலீசில் சிக்கினார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் போலீசார் காரைக்காட்டில் கடலூர்-விருத்தாசலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து வந்தவர், 2 சாக்கு மூட்டைகளை வைத்திருந்தார். அதை போலீசார் சோதனை செய்த போது, சாராய பாக்கெட்டுகள் இருந்தன. தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
அதில், கடலூர் முதுநகர் அருகே உள்ள காரைக்காடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் ராமமூர்த்தி(வயது 33), கண்ணாரப்பேட்டையை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் அரவிந்த் (22) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் கூட்டாக சேர்ந்து புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி, அதை காரைக்காடு பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிந்தது. தொடர்ந்து ராமமூர்த்தி, அரவிந்த் ஆகியோரை கடலூர் முதுநகர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 வரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 120 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
கைதானவர்களில், ராமமூர்த்தி பிரபல சாராய வியாபாரி ஆவார். இவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக போலீசார் தேடி வந்தனர். ஆனால் இவர் போலீசுக்கு தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வந்த நிலையில், சாராய விற்பனையிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், தற்போது ராமமூர்த்தி போலீசில் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.