திருக்கழுக்குன்றம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

திருக்கழுக்குன்றம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-02-02 22:15 GMT
கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த விளாகம் கிராமம் பாட்டைத்தெருவை சேர்ந்தவர் மணி. இவரது 3-வது மகன் ஜெயபிரகாஷ் (வயது 13). இவன் அருகில் உள்ள தேசுமுகிப்பேட்டை அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று விடுமுறை என்பதால் மதியம் தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் அருகில் உள்ள மாதுளங்குப்பம் ஏரியில் குளிக்க சென்றான்.

அப்போது ஜெயபிரகாஷ் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் ஜெயபிரகாஷ் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான்.

அவரது நண்பர்களின் அலறல் சத்தம் கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் ஜெயபிரகாசை கரைக்கு தூக்கி வந்தனர். அதற்குள் ஜெயபிரகாஷ் இறந்து விட்டான். தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று மாணவன் ஜெயபிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்