வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2019-02-02 21:30 GMT
ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வேடநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் முருகன் (வயது 24) கூலி தொழிலாளி. இவரின் அக்காள் கோகிலாவின் குழந்தை கடந்த 2 நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக முருகன் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடிக்கு சென்றார்.

பின்னர் நேற்று அதிகாலையில் தூத்துக்குடியில் இருந்து வேடநத்தம் புறப்பட்டார். மோட்டார் சைக்கிள் வாலசமுத்திரம் அருகே சென்று கொண்டு இருந்தது. வாலசமுத்திரம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், சாலை போக்குவரத்து மாற்றப்பட்டு இருந்தது. அந்த வழியாக செல்லும் வாகனங்களை மாற்றி விட வேண்டும் என்பதற்காக சாலையில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன.

அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற முருகன், அந்த இரும்பு தடுப்புகளை பார்க்காமல் அதன்மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரை அடுத்த பச்சையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமர். இவருடைய மனைவி கல்யாணி (வயது 40). சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த இவருடைய உறவினர் ஒருவர் இறந்து விட்டார். எனவே இறந்தவரின் மகளுக்கு புதிய துணி எடுத்து கொடுப்பதற்காக, கல்யாணி தன்னுடைய உறவினரான தூத்துக்குடியைச் சேர்ந்த பரமசிவம் மகன் சந்துருபாண்டி வள்ளிக்கண்ணுவுடன் (24) மோட்டார் சைக்கிளில் வேம்பாருக்கு புறப்பட்டு சென்றார்.

வேம்பார் கீதாநகர் பகுதியில் சென்றபோது, சாலையின் குறுக்காக திடீரென்று மாடு ஓடியது. இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கல்யாணி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக வேம்பார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே கல்யாணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்