மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவில் ஓட்டை: ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டதால் தமிழக அரசுதான் பொறுப்பு வைகோ குற்றச்சாட்டு

‘‘மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவில் ஓட்டை உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் தமிழக அரசுதான் அதற்கு பொறுப்பு’’ என்று வைகோ குற்றம்சாட்டினார்.

Update: 2019-02-02 23:15 GMT

விருதுநகர்,

நாடாளுமன்றத்தில் பின்பற்றப்படும் நடைமுறைக்கு முரணாக இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்பதற்கு பதிலாக பா.ஜனதா அரசு இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏழைகளின் வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று கூறிவிட்டு தற்போது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.500 டெபாசிட் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். இது விவசாயிகளை கேவலப்படுத்துவது போல் உள்ளது.

நான் முதன்முதலில் பிரதமர் மோடியை சந்தித்தபோது அமெரிக்காவில் ரூஸ்வெல்ட் அறிவித்ததை போல் இங்கும் விவசாயிகளுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிடும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் எதையும் செய்யவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் டெல்டா மாவட்டங்கள் முற்றிலும் அழிந்துபோகும் என்று விவசாயிகள் போராடி வரும் நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. பா.ஜனதாவிடம் பணம் உள்ளது. அ.தி.மு.க.விடமும் பணம் உள்ளது. இக்கட்சிகளுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை.

பல கட்சிகள் தேர்தலுக்கு பின்னர் பார்க்கலாம் என கூறிவரும் நிலை உள்ளது. தென் மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற வாய்ப்பு இல்லை. கர்நாடகத்தில் வேண்டும் என்றால் ஒரிரு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு 130 இடங்களே கிடைக்கும். மாநில கட்சிகளால் ஆன கூட்டாட்சியே வர வாய்ப்புள்ளது.

நான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சியின் உயர்மட்டக்குழுதான் முடிவு எடுக்க வேண்டும். தான் தனிப்பட்ட முறையில் அறிவிக்கமுடியாது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவது பற்றியும் உயர்மட்டக்குழுதான் முடிவு எடுக்க வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தொகுதி பங்கீடு பற்றி பேசப்படும்.

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு கடந்த 3 நாட்களாக சுப்ரீம் கோட்டில் நடைபெற்றது. நான் அங்கு தான் இருந்தேன். நான் வாதாட வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் வைத்தியநாதன் மிக கவனமாக வாதத்தை எடுத்து வைத்தார். ஆனாலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவில் ஓட்டை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பு உள்ளது. நான் 2013–ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2 மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தேன். தமிழக அரசும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தது.

எனது மேல் முறையீட்டு மனுக்களையும், இந்த வழக்கு விசாரணையின் போது சேர்த்து விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. தமிழக அரசோ, மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளோம் என்பதை சொல்லவே தயார் இல்லை. தமிழக அமைச்சரவை கூடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு சென்று இருக்க முடியாது. ஒரு வேளை ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் தமிழக அரசுதான் அதற்கு பொறுப்பு.

13 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட பின்னர்தான் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஆணை பிறப்பித்தது. வரும் 5–ந் தேதி இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்று கருத்து கூறப்படுவதாக வைகோவிடம் நிருபர்கள் கேட்டபோது, அதற்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

மேலும் செய்திகள்