அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாததால் போராட்டங்களை தூண்டி ஆட்சியை கவிழ்க்க சதி மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாததால், போராட்டங்களை தூண்டி ஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2019-02-02 23:30 GMT
சேலம், 

சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து இளம்பிள்ளை செல்லும் சாலையில் கந்தம்பட்டி சந்திப்பில் ரூ.33 கோடியில் புதிய மேம்பாலம், வாழப்பாடி ஒன்றியம் புழுதிகுட்டை-சந்துமலை சாலை புங்கமடுவு அருகில் ரூ.3½ கோடியில் உயர்மட்ட பாலம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் தும்பல் பகுதியில் ரூ.3½ கோடியில் உயர்மட்ட பாலம் என மொத்தம் ரூ.40 கோடியில் 3 புதிய மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இந்த பணிகளுக்காக அடிக்கல் நாட்டு விழா மற்றும் பல்வேறு துறைகள் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் கந்தம்பட்டியில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ரோகிணி வரவேற்றார்.

எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாஜலம், சக்திவேல், வெற்றிவேல், மனோன்மணி, ராஜா, மருதமுத்து, சின்னதம்பி, மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டியும், ரூ.12 கோடியே 26 லட்சம் மதிப்பில் 4 ஆயிரத்து 49 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏ.வி.ஆர். ரவுண்டானா, குரங்குசாவடி, திருவாக்கவுண்டனூரை தொடர்ந்து தற்போது கந்தம்பட்டியிலும் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. கந்தம்பட்டி சந்திப்பில் கடந்த 2003 முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் 100 பேர் இறந்துள்ளனர். 343 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். விலை மதிக்க முடியாத உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதே அரசின் கடமை. விபத்து இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதன்முதலாக சேலத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பஸ்போர்ட் விரைவில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது நாங்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி இல்லை. ஆனால், தேர்தலின் போது அளித்த வாக்குறுதி மட்டுமில்லாமல் மக்களுக்கு தேவையான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களும் ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்காகவே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்கள். அவர்களை தொடர்ந்து இந்த அரசும் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தாலிக்கு தங்கம், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவர்களுக்கு மடிக்கணினி, கிராம பெண்களுக்கு கறவை மாடுகள், மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு கடனுதவி என கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காக ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு பஞ்சாயத்தில் உட்கார்ந்து கொண்டு கிராமசபை கூட்டம் என்று, இவர் தனியாக ஒரு கூட்டத்தைக் கூட்டி பேசுகிறார்.

அப்போது, பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசின் மீது சுமத்துகிறார். இந்த ஆட்சியை பற்றி விமர்சனம் செய்கிறார். இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று ஒரு தவறான குற்றச்சாட்டை கூறிக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில், என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோ, நடைமுறைப்படுத்தப்பட்டதோ அந்த திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி, மக்கள் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அதைப் பொறுத்து கொள்ள முடியாத மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டி பேசுகின்ற போது, கிராமம் தான் கோவில் என்று பேசுகிறார். இது ஏற்கனவே நமக்கு தெரியும். நான் கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவன். அவர் நகரத்தில் இருந்ததால், கிராமம் ஒரு கோவில் என்று இப்பொழுதுதான் புதிதாக கண்டுபிடித்திருக்கிறார். அவரது புது கண்டுபிடிப்பிற்கு, கின்னஸ் சாதனை கிடைத்தது மாதிரி, அவர் அந்த சாதனையை படைத்திருக்கிறார். ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகள் திருமண உதவித் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்பதற்காக தான் தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். அவருக்கு புள்ளி விவரங்கள் தெரியாது.

மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் என்னை பற்றிய நினைப்பு தான் இருக்கிறது. தூங்கும்போது கூட என்னை நினைத்து கொண்டுதான் தூங்குவார் என்று நினைக்கிறேன். எப்போது இந்த எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியிலிருந்து அகற்ற வேண்டும்? அந்த பதவியிலிருந்து அகற்றுவதற்கு எவ்வித தில்லுமுல்லு செய்யணும்? எவ்வித சூழ்ச்சி செய்யணும், யார் யாரையெல்லாம் போராடுவதற்கு தூண்டிவிடுவது. இந்த நாட்டிலே எப்படியெல்லாம் சட்டம், ஒழுங்கு சீர் குலைவதற்கு என்னென்ன சூழ்ச்சி செய்ய வேண்டுமோ? அத்தனையையும் அவர் செய்து கொண்டிருக்கிறார். போராட்டங்களை தூண்டி இந்த ஆட்சியை கவிழ்க்க சதி நடக்கிறது. ஆனால் அத்தனையும் மக்களுடைய ஆதரவோடு முறியடிக்கப்பட்டுள்ளது.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1,874 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் சேலத்தில் மட்டும் 73,796 மகளிர் பயன்பெற்றுள்ளனர். லட்சக்கணக்கான பேர் இந்த சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்று, சுயமாக தொழில் தொடங்கக்கூடிய மாவட்டமாக சேலம் மாவட்டம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. சேலம் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை மாவட்டங்களிலும் சுயஉதவிக்குழுவிற்கு தேவையான நிதி வழங்கப்படுகிறது. தேவையான மானியமும் வழங்கப்படுகிறது. அதை தெரிந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசவேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

சேலம்-செங்கப்பள்ளி 4 வழிச்சாலையை ரூ.1,937 கோடியில் 8 வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் சேலம்-ஊத்தங்கரை-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் 44 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு வழிச்சாலையிலிருந்து 4 வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை முதல் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வரை 45.20 கிலோமீட்டர் சாலையை ரூ.289.12 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி செயல்படுத்தப்பட உள்ளது.

சேலம் மாநகரில் பாதாள சாக்கடை பணி, குடிநீர் குழாய் பதிக்கின்ற பணி, மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு கேபிள் பதிக்கின்ற பணிகளால் சாலைகள் பழுதடைந்துள்ளது. அதையெல்லாம் சரிசெய்து சீரமைப்பதற்கு அரசு ரூ.77 கோடி ஒதுக்கீடு செய்து அந்த பணி துரிதமாக செயல்படுத்தப்படும்.

சேலம் மாநகரில் அத்தனை சாலைகளும் தமிழக அரசால் சீர்செய்யப்பட்டிருக்கிறது. சேலம் மாநகரத்தில் வருகிறபோது வெளிநாடுகளில் இருக்கின்ற, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் இருக்கின்ற நகரங்களில் நுழைவது போன்ற நிலைமையை உருவாக்குகின்ற அளவிற்கு, சேலம் சீர்மிகு நகரமாக உருவாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுதவிர, பொதுமக்கள் மாலை மற்றும் காலை நேரங்களில் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு 13 பூங்காங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில், மாநகர் மாவட்ட அ.தி.மு.க.பொருளாளர் பங்க் வெங்கடாசலம், துணை செயலாளர் பாலு, பகுதி செயலாளர்கள் தியாகராஜன், சரவணன், யாதவமூர்த்தி, சொர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கே.சி.செல்வராஜ், செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் ராமராஜ், 24-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் கிருபாகரன், சூரமங்கலம் பகுதி ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் காதர்கான் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனுராதா, இளங்கோவன், செந்தில், தனபால், பாலு, பொன்னி பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்