தஞ்சையில், கிராம மக்கள் சாலை மறியல்

புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்காததை கண்டித்து தஞ்சையில், கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-01 23:00 GMT
தஞ்சாவூர்,

கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தன. கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. அதன்படி சாய்ந்த மரங்கள், சேதம் அடைந்த வீடுகள், இறந்த கால்நடைகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு நிவாரண தொகை, பொருட்கள் வழங்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதியில் வருவாய்த்துறையினர் முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்காததை கண்டித்தும், அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டியும் தஞ்சையில் பட்டுக்கோட்டை-மன்னார்குடி பிரிவு சாலையில் கண்டிதம்பட்டு கிராமமக்கள் நேற்றுகாலை தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில இளைஞரணி செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியலை தயார் செய்து, கொடுத்தால் தாசில்தாரை நேரில் சந்தித்து பேச நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்று கிராமமக்கள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தினால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து கிராமமக்கள் கூறியதாவது:-

சேதம் அடைந்த கூரை வீடுகள், ஓட்டு வீடுகளுக்கு மட்டும் தான் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என கூறி கணக்கெடுப்பு நடத்தினர். ஆனால் மாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கண்டிதம்பட்டு கிராமத்தில் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 40 குடும்பத்தினருக்கு தான் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

உண்மையாக பாதிக்கப் பட்டவர்களுக்கு கூட நிவாரணப் பொருட்கள் கிடையாது என்று கூறுகின்றனர். இதனால் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். உடனே நிவாரணப் பொருட்கள் பெறுவதற்கான கூப்பனை வழங்கினார்கள். ஆனால் இதுவரை வழங்கப் படவில்லை.

அதிகாரிகளிடம் கேட்டால் 76 குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கு நிவாரண தொகை, நிவாரண பொருட்கள் வழங்கவில்லை என்றால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்