தஞ்சையில் 9-ந்தேதி நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் கலெக்டர் நிர்மல்ராஜ் தகவல்

தஞ்சையில் வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ள தனியார் வேலை வாய்ப்பு முகாமில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.

Update: 2019-02-01 22:45 GMT
திருவாரூர், 

திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கஜா புயல் பாதித்த தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகங்கள் ஆகியவை இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூரில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் வருகிற 9-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., என்ஜினீயரிங் படிப்பு கல்வித்தகுதி உள்ள அனைவரும் தங்களது சுய விவர குறிப்பு மற்றும் ஆதார் அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் முகாமில் அரசு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஆலோசனைகள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் பயிற்சி வகுப்புகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு, அயல்நாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசனைகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் தொடர்பான முகாம்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்