சட்டம், ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் ரூ.3 லட்சம் கோடிக்கு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

சட்டம், ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் ரூ.3 லட்சம் கோடிக்கு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

Update: 2019-02-01 23:00 GMT

மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இந்திய குற்றவியல் கழகமும், இணைந்து அனைத்திந்திய குற்றவியல் மாநாட்டை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடத்தின. பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநாடு ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். அகில இந்திய குற்றவியல் கழகத்தின் தலைவர் திவாரி, மூத்த தலைவர் மாதேவ் சோமசுந்தரம், செயலாளர் உமர், எம்.எல்.ஏ.க்கள் சரவணன், பெரியபுள்ளான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுடெல்லி என பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டு பேசினார். அவர் பேசும் போது, குற்றங்களை குறைக்க அரசும், காவல்துறையும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஒரு நாட்டில் குற்றங்கள் குறையவேண்டுமென்றால் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு இந்தியாவிலேயே அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. இந்த 7 ஆண்டுகளில் தமிழகத்தில் 1,49,249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 1 லட்சத்து 10 ஆயிரம் வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றம் தமிழகத்தில் மிகக்குறைவு தான். தேசிய அளவில் 51.4 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றவிகதம் இருந்தாலும், தமிழகத்தில் அது வெறும் 10.7 சதவீதம் தான் உள்ளது. இந்தாண்டு இந்தியாவிலேயே சிறந்த காவல்நிலையமாக பெரியகுளம் காவல்நிலையம் 8–வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் ரூ.3 லட்சம் கோடிக்கு முதலீடுகள் வந்து குவிந்தன. ஒரு பத்திரிகை ஆய்வில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று விருதினை தமிழகத்திற்கு வழங்கியது என்றார்.

மேலும் செய்திகள்