சிவக்குமார சுவாமி பெயரில் நலத்திட்டம் அமல் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தகவல்

சிவக்குமார சுவாமி பெயரில் ஒரு மக்கள் நலத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று துணை முதல்- மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

Update: 2019-01-31 22:05 GMT
துமகூரு,

துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி தனது 111-வது வயதில் கடந்த மாதம்(ஜனவரி) 21-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் மறைவையொட்டி 11-வது நாள் சடங்கு நிகழ்ச்சி துமகூரு மடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பரமேஸ்வர் பேசியதாவது:-

சிவக்குமார சுவாமியின் பெயரில் ஒரு மக்கள் நல திட்டம் அமல்படுத்தப்படும். முதல்-மந்திரி இந்த விஷயத்தில் அனைவருடனும் ஆலோசித்து முடிவு எடுப்பார். சிவக்குமார சுவாமி நம்மை விட்டு சென்றுவிட்டார். மனரீதியாக அவர் நம்முடன் எப்போதும் இருப்பார்.

உணவு, கல்வி

மடத்தில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் கல்வி வழங்கப்படுகிறது. வெளிமாநிலத்தை சேர்ந்த குழந்தைகளும் இங்கே படிக்கிறார்கள். நமது நாடு கலாசாரம், மதம், அறிவு ஆகியவற்றின் காரணமாக உலக அளவில் சிறந்து விளங்குகிறது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தர்மம் குறித்து எழுதிய புத்தகத்தை படிக்குமாறு எனக்கும், சித்தராமையாவுக்கும் அறிவுறுத்தினார். அந்த புத்தகத்தை நாங்கள் படித்தோம்.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

பதவி ராஜினாமா

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர், குமாரசாமிக்கு எதிராக பேசினார். அதற்கு பதிலளித்த குமாரசாமி பதவியை ராஜினாமா செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனதா தளம்(எஸ்) கூட்டத்தில் பேசிய தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர், சித்தராமையாவை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் சித்தகங்கா மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி குமாரசாமியும், சித்தராமையாவும் சிரித்தபடி பேசிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேலும் செய்திகள்