பவானிசாகர் அருகே காலால் உதைத்து வீட்டு மதில் சுவரை உடைத்த யானை
பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் புகுந்த யானை காலால் உதைத்து வீட்டு மதில் சுவரை உடைத்தது.
பவானிசாகர்,
பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி புங்கார் காலனி கிராமம் அமைந்துள்ளது. இங்கு யானை ஒன்று தினமும் இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறி புங்கார் காலனி, காராச்சிக்கொரை கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து அந்த யானை மீண்டும் வெளியேறி புங்கார் காலனி கிராமத்துக்குள் புகுந்தது. அங்குள்ள திருப்பதி கோவில் அருகே உள்ள வீதியில் நின்றபடி பிளிறியது.
அப்போது நிர்மலா(வயது 45) என்பவருடைய வீட்டின் மதில் சுவரை காலால் உதைத்து தள்ளியது. இதில் சுவர் உடைந்து விழுந்து சேதமானது. இதுகுறித்து பொதுமக்கள் உடனே பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று பட்டாசுகள் வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. எனவே அந்த யானை ஊருக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’. என்றனர்.