சேலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 30 ரவுடிகள் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை
சேலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 30 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சேலம்,
சேலம் மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்திட போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நேற்று ஜான்சன்பேட்டை, பாரதிநகர், மணக்காடு, கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரை தலைமையிலும், கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி. காலனி, கஸ்தூரிபாய் நகர், நாராயணநகர் உள்ளிட்ட பகுதிகளில் துணை போலீஸ் கமிஷனர் சியாமளாதேவி தலைமையிலும் பிரபல ரவுடிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ரவுடிகளின் பெற்றோர்களிடம், உங்கள் மகன்கள் தேவையில்லாமல் இரவு நேரங்களில் வெளியில் சுற்றக்கூடாது என்றும், அதையும் மீறி சுற்றி குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றும் போலீசார் எச்சரித்தனர். இதனிடையே பல வழக்குகளில் சிக்கி தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட மற்றும் நீதிமன்ற பிடியாணையில் உள்ள ரவுடிகளை கைது செய்யும் பணியும் நடந்தது.
அதன்படி, மாநகரில் அன்னதானபட்டி பகுதியை சேர்ந்த ஜவகர், வளத்திகுமார், சின்னதிருப்பதியை சேர்ந்த பிளேடு செல்வம், அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த மாட்டுக்கார சரவணன், கன்னாங்காட்டை சேர்ந்த பிரதாப், பள்ளப்பட்டியை சேர்ந்த நாட்டாண்மை செல்வம், கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன், விக்னேஷ், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பிரபு, கார்த்தி, பிலால், தாமரைச்செல்வன், சலீம்பாட்ஷா, மூர்த்தி உள்பட 30 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் தங்கதுரை கூறும் போது, ‘பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று சோதனை செய்வது வழக்கமான ஒன்றுதான். இந்த சோதனையின் போது, ரவுடிகளின் பெற்றோர்களை எச்சரித்து உள்ளோம். தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும்‘ என்றார்.