கடந்த 6 மாதங்களில் 3 காப்பகங்களில் பாலியல் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை கலெக்டர் தகவல்
கடந்த 6 மாதங்களில் 3 காப்பகங்களில் பாலியல் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
திருவண்ணாமலை,
இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 31 தனியார் காப்பகங்கள் இயங்கி வருகிறது. இதில் ஒரு காப்பகம் அரசு அனுமதி பெறாமலும், மீதமுள்ள 30 காப்பகங்கள் அரசு அனுமதி பெற்றும் இயங்கி வருகிறது. அனுமதியில்லாமல் செயல்படும் அந்த காப்பகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அவர்களும் உரிய அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த தனியார் காப்பகங்களில் கிராமப்புறங்களில் உள்ள ஆதரவற்ற ஏழை, எளிய மாணவ, மாணவிகளை கண்டெடுத்து அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டு அருகில் உள்ள பள்ளிகளில் படிக்க வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
தற்போது புதிதாக குழந்தைகள் நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மூலம் தனியார் குழந்தைகள் இல்லங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புகார்களின் அடிப்படையில் கடந்த 6 மாதத்தில் 3 காப்பகங்கள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு அங்கு நடைபெற்ற பாலியல் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் இந்த இல்லங்களை சேர்ந்த 80 குழந்தைகள் மீட்கப்பட்டு திருவண்ணாமலையில் அரசு வரவேற்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். முற்றிலும் பெற்றோரை இழந்த மாணவிகளுக்கு மட்டுமே காப்பகத்தில் இதுபோன்ற பாலியல் தொந்தரவு நடந்து வருகிறது. தனியார் காப்பகங்களில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் தனியார் குழந்தைகள் இல்லங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான சட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் தனியார் இல்லங்களில் உள்ள குழந்தைகளை வெளியில் சுற்றுலா அழைத்து சென்று அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, ஏதேனும் குறைகள் உள்ளதா? என்று கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டும், அதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் முகாம் முடிந்து வரும்போது அலுவலர்கள் மூலம் குழந்தைகளுக்கு கலெக்டர் அலுவலக முகவரி எழுதப்பட்ட 3 அஞ்சல் அட்டைகள் வழங்கப்படுகிறது. தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அந்த அஞ்சல் அட்டைகளில் குறைகளை எழுதி குழந்தைகள் படிக்கும் பள்ளி ஆசிரியர்கள் மூலம் அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.