அரக்கோணம், தக்கோலம் வழியாக சுற்றுவட்ட பாதையில் மார்ச் முதல் வாரத்தில் ரெயில்கள் இயக்கப்படும் பொது மேலாளர் தகவல்
சென்னை, அரக்கோணம், தக்கோலம், செங்கல்பட்டு, தாம்பரம் சுற்றுவட்ட ரெயில் பாதையில் மார்ச் முதல் வாரத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஸ்ரேஸ்தா கூறினார்.
அரக்கோணம்,
சென்னையில் இருந்து அரக்கோணம், தக்கோலம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சுற்றுவட்ட ரெயில் பாதை அமைத்து ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள், பயணிகள் ரெயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். சுற்று வட்ட ரெயில்பாதை செல்லும் பகுதியில் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ்.ராஜாளி கடற்படை விமானதளம் இருப்பதால் அந்த பகுதியில் மின்மயமாக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் அரக்கோணத்தில் இருந்து தக்கோலம் வரை மின்மயமாக்கப்பட்ட புதிய ரெயில் தடத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்தது. அதன்பேரில் அரக்கோணத்தில் இருந்து மேல்பாக்கம், பரித்திப்புத்தூர் வழியாக தக்கோலம் வரை 9.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.55 கோடியில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியை தொடங்கி தற்போது நிறைவு பெற்றது. கடந்த 25-ந் தேதி தண்டவாளத்தின் தரம், மின்மயமாக்கல் பணிகள், ரெயில்வே கேட் பகுதிகளில் தென்மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் சுற்றுவட்ட ரெயில் பாதையில் பணிகளை ஆய்வு செய்ய தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஸ்ரேஸ்தா சிறப்பு ரெயிலில் அரக்கோணம் அருகே உள்ள மேல்பாக்கம் யார்டு பகுதிக்கு வருகை தந்தார். பின்னர் மேல்பாக்கம் பகுதியில் சுற்றுவட்ட பாதையில் இருந்து மற்ற ரெயில் பாதைகளுக்கு தண்டவாளத்தை இணைக்கும் இடங்களில் ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து அரக்கோணம் ரெயில்வே பொறியியல் பணிமனைக்கு சென்று கோப்புகளை பார்வையிட்டு பணிமனையில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து பொது மேலாளர் ஆர்.கே.குல்ஸ்ரேஸ்தா நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் இருந்து அரக்கோணம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்றுவர சுற்றுவட்ட ரெயில்பாதை அமைக்கப்படுமா? என்று கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தற்போது கோரிக்கை நிறைவேறி உள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் வகையில் சுற்றுவட்ட ரெயில்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வழித்தடத்தில் அரக்கோணத்தில் இருந்து தக்கோலம் வரை மின்மயமாக்கும் பணிகள், ரெயில்வே கேட் அமைக்கும் பணிகள் தற்போது நிறைவு பெற்று ரெயில் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. சுற்றுவட்ட ரெயில் பாதையில் இந்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை கடற்கரை வரை ஒரு மின்சார ரெயில் செல்லும் போது, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், அரக்கோணம், திருவள்ளூர் வழியாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு ஒரு மின்சார ரெயில் சுற்றுவட்ட ரெயில்பாதையில் சென்று வரும். சுற்று வட்ட ரெயில் பாதையில் படிப்படியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அரக்கோணம் பொறியியல் பணிமனையில் வேலையின் அளவு அதிகரிக்கும் போது கூடுதல் ஆட்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சென்னை கோட்ட மேலாளர் நவீன்குலாதி, அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு மற்றும் ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் உடனிருந்தனர்.