இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: வேலூர் மாவட்டத்தில் 30 லட்சத்து 68 ஆயிரம் வாக்காளர்கள் ஆண்களை விட பெண்களே அதிகம்

வேலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 30 லட்சத்து 68 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

Update: 2019-01-31 23:00 GMT
வேலூர், 

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு தீவிர சிறப்பு சுருக்க திருத்தம், வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், வேலூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 86 ஆயிரத்து 758 பேர், பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 37 ஆயிரத்து 103 பேர், 3-ம் பாலினத்தவர்கள் 118 பேர் என 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 பேர் இடம் பெற்றிருந்தனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. பெயர் சேர்க்க படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, திருத்தம் மேற்கொள்ள படிவம்-8, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ ஆகிய விண்ணப்பங்களை பெற்று திருத்தங்களை சரி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. சிறப்பு முகாம்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலை வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் 30 லட்சத்து 68 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த ஆண் வாக்காளர்கள் 15 லட்சத்து 7 ஆயிரத்து 187 பேரும், பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 61 ஆயிரத்து 446 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 145 பேரும் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். குடியாத்தம் (தனி) தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 835 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் இடம் பிடித்திருந்தனர். அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 91 ஆயிரத்து 564 பேர் புதிதாக சேர்க்கவும், 46 ஆயிரத்து 765 பேர் பெயர்கள் நீக்கவும், 15 ஆயிரத்து 892 பேர் பெயர் திருத்தம் மேற்கொள்ளவும், 8 ஆயிரத்து 344 பேர் சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்டத்தில் உள்ள 1,648 வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. அதனை பொதுமக்கள் பார்வையிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் பிரிவு தாசில்தார் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்