3 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு பெங்களூரு வளர்ச்சிக்கு ரூ.8,015 கோடி நிதி கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்
பெங்களூரு நகரில் 3 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.8,015 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கர்நாடக மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது.
பெங்களூரு,
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு
இதில் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி கிருஷ்ண ைபரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தடை விதிக்கவில்லை
இதையடுத்து அந்த சட்டத்தை அமல்படுத்தாமல் வைத்திருந்தோம். இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் முகுல் ரோத்தகியிடம் ஆலோசனை கேட்டோம். அவர், இந்த சட்டத்தை அமல்படுத்தலாம் என்று பரிந்துரை செய்தார். கர்நாடக அரசின் சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை ஒன்றும் விதிக்கவில்லை.
அதனால் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனே அமல்படுத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த சட்ட விதிமுறைகள், சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவை.
ரூ.8,015 கோடி நிதி
சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, மிக விரைவாக இந்த சட்டம் அமல்படுத்தப்படும். இந்த விஷயத்தில் மந்திரிகள் அனைவரும் தங்களின் கருத்துகளை கூறினர். நீண்ட விவாதத்திற்கு பிறகே இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
புதிய பெங்களூருவை உருவாக்கும் பொருட்டு, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.8,015 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 3 ஆண்டுகளில் இந்த நிதி செலவிடப்படும்.
குடிநீர் திட்டம்
மேம்பாலங்கள் கட்டுதல், சாலைகளை அகலப்படுத்துதல், ராஜ கால்வாய்களை மேம்படுத்துதல், பூங்கா மற்றும் ஏரிகளை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நிதி முழுவதும் மாநில அரசின் நிதி ஆகும்.
மாநகராட்சி நிர்வாகம் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரெயில், உயர்த்தப்பட்ட சாலை அமைத்தல் போன்ற திட்ட நிதிகள் வேறு. இதற்கும், அந்த நிதிக்கும் தொடர்பு இல்லை. விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி பகுதியில் குடிநீர் திட்டத்திற்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
உண்டு உறைவிட பள்ளிகள்
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணா ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.49 கோடியும், மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவில் 3 கிராம குடிநீர் திட்டத்திற்கு ரூ.100 கோடியும் நிதி ஒதுக்கப்படுகிறது.
சமூக நலத்துறை சார்பில் செயல்படும் 28 உண்டு உறைவிட பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.700 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் புதிதாக 4 உண்டு உறைவிட பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.
புதிய கட்டிடம் கட்ட...
உப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ.29 கோடியும், மைசூரு அரசு மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.67 கோடியும் நிதி ஒதுக்க மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
டெல்லியில் கர்நாடக பவனில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.78 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. சட்டசபை கூட்டுக் கூட்டத்தில் கவர்னரின் உரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
பட்டு தொழில் மையம்
ஹாசன் மாவட்டத்தில் ஹேமாவதி நதியில் இருந்து நீரை எடுத்து ஏரிகளை நிரப்ப ரூ.28 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மைசூருவில் ஒரு மெகா பட்டு தொழில் மையம் அமைக்கப்படுகிறது.
இதன் நிர்வாகத்திற்கு ஒரு தனி அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெலவாடி என்ற இடத்தில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும்.
இவ்வாறு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.