வறட்சி நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் குமாரசாமி குற்றச்சாட்டு
வறட்சி நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது என்று குமாரசாமி குற்றம்சாட்டினார்.
பெங்களூரு,
மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள அவரது சிலையின் அடியில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதல்-மந்திரி குமாரசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
“கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. ரூ.2,500 கோடி நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. வெறும் ரூ.949 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.
வாக்காளர்களின் மனதை...
மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது. இது எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. மராட்டிய மாநிலத்திற்கு ரூ.4,000 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அங்குள்ள வாக்காளர்களின் மனதை வெல்ல, மத்திய அரசு இந்த அளவுக்கு நிதி ஒதுக்கியுள்ளது.
கர்நாடகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு புறக்கணிப்பு மனநிலையை வெளிப்படுத்துவது இதன் மூலம் தெளிவாகிறது. வறட்சி தொடர்பாக மீண்டும் ஒரு முறை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோரை நேரில் சந்தித்து பேசுவோம்.
மதுவிலக்கு
கர்நாடகத்தில் மது விலக்கை அமல்படுத்த சாத்தியமில்லை. மதுவிலக்கால் ஏற்படும் சாதக-பாதகங்கள் குறித்து மந்திரிசபையில் விவாதிக்கப்பட வேண் டும்.”
இவ்வாறு குமாரசாமி கூறினார்.