குட்கா விவகாரம்: சசிகலா, டி.ஜி.பி. குறித்து மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பு விவாதம்

“குட்கா விவகார வழக்கில் சசிகலா, டி.ஜி.பி. குறித்து மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பான விவாதம் நடந்தது.

Update: 2019-01-30 22:45 GMT
மதுரை,

மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் “டி.கே.ராஜேந்திரனை டி.ஜி.பி. ஆக பணி நீட்டிப்பு வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே அவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதற்காக பிறப்பித்த அரசாணையை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என கூறி இருந்தார்.

இதேபோல மனுதாரர் தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவில், “குட்கா முறைகேட்டில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு தொடர்பு இருப்பது குறித்து வருமானவரித்துறையினர் கடிதம் எதுவும் அரசு அலுவலகத்தில் இல்லை என்று, இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சசிகலா அறையில், கடந்த 2017-ம் ஆண்டு வருமானவரித்துறை சோதனையின்போது, குட்கா முறைகேட்டில் டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வருமான வரித்துறையினர் கடிதம் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. எனவே வருமானவரித்துறையினர் அனுப்பிய கடிதம் குறித்து கோர்ட்டில் தவறான தகவல் தெரிவித்த தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்குகள் இறுதி விசாரணைக்காக நேற்று நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிடுகையில், “டி.கே.ராஜேந்திரனை டி.ஜி.பி. ஆக பணி நீட்டிப்பு செய்ய மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு பரிந்துரைத்தபோது, லஞ்சப்புகார் தொடர்பான ஆவணங்கள் எதுவும் அரசிடம் இல்லை” என்று வாதாடினார்.

முன்னாள் டி.ஜி.பி. அசோக்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல், “லஞ்சப்புகார் தொடர்பாக வருமானவரித்துறையினர் அனுப்பிய கடிதத்தை முறைப்படி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

சசிகலா தரப்பு வக்கீல், “போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தபோது சசிகலா அங்கு இல்லை. எனவே அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று வாதாடினார்.

அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “லஞ்சப் புகார் தொடர்பான ஆவணங்கள் திடீரென மாயமாகி உள்ளது. அந்த ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பிறகாவது, டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை மறுபரிசீலனை செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு பரிந்துரைக்க உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யவில்லை. எனவே இதுகுறித்து மனுதாரர் அனுப்பிய புகார் மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்