ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறதா? ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறதா? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Update: 2019-01-30 22:30 GMT

மதுரை,

தூத்துக்குடியை சேர்ந்த மோகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிந்து துன்புறுத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மக்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வட்டாரத்தில் போராட்டத்துக்கு அனுமதி கேட்பவர்கள் தேவையின்றி அலைக்கழிக்கப்படுகிறார்கள். துப்பாக்கிச்சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சாட்சி அளிப்பவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர். துப்பாக்கிச்சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சி.பி.ஐ., அருணாஜெகதீசன் ஆணையத்திடம் சாட்சி கூறிய சந்தோஷ்ராஜ் என்பவர் மீது போலீசார் பல்வேறு பொய் வழக்குகளை பதிந்துள்ளனர்.

எனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிந்து, சட்டவிரோதமாக கைது செய்வதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆஜரானார்.

இதையடுத்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பார்த்த நீதிபதிகள் அதிருப்தி அடைந்து, ‘‘இந்த அறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அரசு செயல்படுவதை போல உள்ளது. ஆலைக்கு எதிராக போராட்டம் என்று பேசினாலே நள்ளிரவில் கைது செய்வதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆர். நகல்களை வருகிற 14–ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்