பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் 32 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-30 22:45 GMT
அறந்தாங்கி,

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், அறந்தாங்கி பஸ் நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கர்ணா தலைமை தாங்கினார். போராட்டத்தில் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 24 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் காலியிடங்களையும் பூர்த்தி செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.

ரெயில்வே துறையில் காலி பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களை கொண்டு மீண்டும் பணியமர்த்த பிறப்பித்த அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசு வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய சிறு தொழில் வேளாண் துறை போன்றவற்றில் வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்