நாமக்கல்லில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பிரசார செயலாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார். மாநில துணை தலைவர் ரகுநாதன் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். அதைத் தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும், அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
21 மாத கால ஊதியக்குழு நிலுவைத்தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். நிரந்திர காலமுறை ஊதியம் இல்லாத பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் தங்கம், மாவட்ட பொருளாளர் சரவணக்குமார், வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.