சென்னை புறநகர் பகுதியில் 1 டன் குட்கா பறிமுதல்; 4 பேர் கைது
சென்னை புறநகர் பகுதியில் 1 டன் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
அம்பத்தூர்,
சென்னை அம்பத்தூர் ராமாபுரம் பெரியார் தெருவில் அம்பத்தூர் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த தெருவில் உள்ள ஒரு கடையில் 10 அட்டைப்பெட்டிகளிலும், 15 கோணிப்பைகளில் சுமார் 650 கிலோ குட்கா வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.3½ லட்சம் மதிப்புள்ள அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ராமாபுரம் பாலாஜி தெருவைச் சேர்ந்த அப்பாஸ்(வயது 36), வேன் டிரைவரான நெல்லையை சேர்ந்த கோபால் (25), கோவை உடையார் பாளையத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ்(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் பகுதியில் சப்–இன்ஸ்பெக்டர் பிரதீப் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அயப்பாக்கம் பவானி நகர் எம்.ஜி.ஆர். தெருவைச்சேர்ந்த தேன்ராஜ் (36) என்பவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து உள்ளார். அவர், தனியாக ஒரு வீடு எடுத்து வைத்து அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
தனிப்படை போலீசார் தேன்ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 350 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.