ஆலங்குடியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் 23 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைத்தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-30 22:45 GMT
வலங்கைமான்,

அரசு மற்றும் பொதுத்துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும். தனியார் துறையில் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைத்தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சலாவுதீன், மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட குடவாசல் ஒன்றிய தலைவர் ராஜமோகன், ஒன்றிய செயலாளர்கள் பகத்சிங், தீனதயாளன் உள்பட 23 பேரை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் கும்பகோணம்-மன்னார்குடியில் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்