பிரமாண்ட பெருமாள் சிலை கிருஷ்ணகிரி வந்தது மலர் தூவி பக்தர்கள் வழிபட்டனர்

பிரமாண்ட பெருமாள் சிலை நேற்று கிருஷ்ணகிரியை வந்தடைந்தது. இதையொட்டி மலர் தூவி பக்தர்கள் சாமியை வழிபட்டனர்.

Update: 2019-01-30 23:00 GMT
கிருஷ்ணகிரி, 

கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை மலையில் ஒரே கல்லில் பிரமாண்ட பெருமாள் சிலை செதுக்கப்பட்டது.

இந்த சிலை 240 டயர்கள் கொண்ட பெரிய லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூரு நோக்கி புறப்பட்டது. இது பல்வேறு நகரங்களை கடந்து கடந்த 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டைக்கு வந்தடைந்தது. வழியில் பாம்பாறு தரைப்பாலத்தில் மண்ணை கொட்டி தற்காலிகமாக பாலம் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட ராட்சத எந்திரங்களின் உதவியுடன் சிலை கடந்து வந்தது.

பின்னர் லாரி கடந்து செல்லும் வகையில் ஊத்தங்கரை நகர் பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து அங்கிருந்து சிலை புறப்பட்டு போச்சம்பள்ளி அருகே உள்ள ஓலப்பட்டி கூட்ரோடு வந்தபோது லாரியின் 10 டயர்கள் வெடித்தன. இதையடுத்து புதிய டயர்கள் மாற்றப்பட்டு சிலை மத்தூரை வந்தடைந்தது. அங்கிருந்த சென்டர் மீடியன் இடித்து அகற்றப்பட்டு, பெருகோபனப்பள்ளி அருகில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட லாரி நேற்று முன்தினம் ஜெகதேவி தர்கா அருகில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை ஜெகதேவியில் இருந்து புறப்பட்ட கோதண்டராமர் சிலை மதியம் 1 மணிக்கு வேட்டியம்பட்டி ஏரிக்கரை அருகே வரும் போது ஒரு டயர் வெடித்தது. இதனால் அங்கு லாரி நிறுத்தப்பட்டு, டயர் மாற்றப்பட்டு புறப்பட்டது. நேற்று மாலை 3 மணியளவில் கிருஷ்ணகிரியில், திருவண்ணாமலை கூட்ரோட்டை வந்தடைந்தது. பின்னர் அங்குள்ள மேம்பாலத்தின் அருகே லாரி நிறுத்தப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ஏராளமான பக்தர்கள் அங்கு வந்து சாமி சிலைக்கு கற்பூரம் தீபாராதனை காட்டியும், மலர் தூவியும், தேங்காய்களை உடைத்தும் வழிபட்டனர். இதனால் திருவண்ணாமலை சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது.

இந்த மேம்பாலம் அருகில் உள்ள தரைப்பாலத்தின் அடியில் ராட்சத தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்த பின் ஆவின் மேம்பாலம் வழியாக பெங்களூரு சாலையில் சிலை கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த சிலை செல்வதை பார்க்க பொதுமக்கள் ஏராளமானோர் கூடுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்