வானவில் : நிசான் நிறுவனத்தின் பேட்டரி கார் ‘லீப்’
நிசான் நிறுவனத்தின் பேட்டரியில் இயங்கும் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத காராக இது திகழ்கிறது.
கடந்த டிசம்பர் மாதமே இந்த பேட்டரி கார் இந்திய சாலைகளில் வெள்ளோட்டம் விடப்பட்டது. நிசான் நிறுவனத்தின் தயாரிப்புகளில் சர்வதேச அளவில் பிரபலமாக திகழ்வதால் இந்த மாடல் கார் இதுவரை 38 லட்சம் விற்பனையாகியுள்ளது.
ஆசிய நாடுகள் மற்றும் அண்டை நாடான பூடானிலும் இது அறிமுகமாகி பலரது பாராட்டுதலைப் பெற்றுள்ளது. இது சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. இது உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும் என்றே தோன்றுகிறது. இதன் விலை ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். இந்தியாவில் இந்த மாடலின் இரண்டாம் தலைமுறை அறிமுகமாகும் என தெரிகிறது.
பேட்டரி காரை 2010-ம் ஆண்டில் நிசான் அறிமுகம் செய்த போதிலும் அதில் இரண்டாம் தலைமுறை காரை 7 ஆண்டுகள் கழித்தே வெளியிட்டது. இந்த மாடல் கார் 148 ஹெச்.பி. மற்றும் இ.எம்.57 எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டுள்ளது. இதில் 40 கிலோவாட் பேட்டரி உள்ளது. இது சோதனை ஓட்டத்தில் ஒரு முறை சார்ஜ் செய்த நிலையில் 380 கி.மீ. ஓடியது.
இது முந்தைய மாடல் அதாவது முதல் தலைமுறை லீப் கார் ஓடிய தூரத்தைக் காட்டிலும் 129 கி.மீ. அதிகமாகும். இதில் விரைவான சார்ஜிங் வசதியும் உள்ளதால் 40 நிமிடத்தில் 80 சதவீத அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.
சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரி காரை ஊக்குவிக்கும் மத்திய அரசு, பேட்டரி கார்களுக்கான சலுகைகளை அதிகம் தர முன்வந்தால் நடுத்தர மக்களும் பேட்டரி காரை வாங்குவது சாத்தியமாகும்.