பட்டப்பகலில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியவர் கைது பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் நேரத்தில் கைவரிசை
பட்டப்பகலில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியவர் கைது செய்யப்பட்டார். இவர், பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் நேரத்தில் கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது.
மும்பை,
மும்பை காந்திவிலியை சேர்ந்த பெண் சம்பவத்தன்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் இருந்து குழந்தையை அழைத்து வர சென்றார். இதையடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.2½ லட்சம் மதிப்பிலான தங்கம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அந்த பெண் சம்தா நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருட்டு ஆசாமியை தேடிவந்தனர்.
இந்தநிலையில், போலீசார் நாலச்சோப்ராவில் வைத்து திருட்டு ஆசாமியை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் இப்ராகிம் பக்ருதீன் ஷேக் என்பது தெரியவந்தது. பெற்றோர் தங்களின் குழந்தைகளை பள்ளியில் விட செல்லும் மற்றும் அழைத்து வரும் நேரத்தில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, வீடுகளின் பூட்டை உடைத்து திருடி வந்தது தெரியவந்தது.
பிடிபட்ட இப்ராகிம் பக்ருதீன் ஷேக் மீது மும்பையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 17 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது தெரியவந்தது.