தூத்துக்குடியில் தடையை மீறி கடலுக்கு சென்ற விசைப்படகு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் மீன்பிடிக்க சென்ற மற்ற படகுகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
தூத்துக்குடியில் தடையை மீறி கடலுக்கு சென்ற விசைப்படகு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 260 விசைப்படகுகள் உள்ளன. இதில் அரசு விதிமுறையின்படி 122 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 138 விசைப்படகுகள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இந்த பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை இணை இயக்குனர் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த தடையை மீறி நேற்று முன்தினம் பதிவு செய்யப்படாத 70 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன.
இதனால் அந்த படகுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவர்கள் புகார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு கரைக்கு திரும்பிய 70 விசைப்படகு உரிமையாளர்களுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்தனர். தொடர்ந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் விசைப்படகு உரிமையாளர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
நேற்று காலையில் பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் மட்டும் வழக்கம் போல் கடலுக்கு செல்ல புறப்பட்டன. அப்போது, பதிவு செய்யப்படாத விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் படகுகளை மீன்பிடி துறைமுகத்தின் படகு நுழைவு வாயில் அருகே குறுக்கே நிறுத்தி மற்ற படகுகளை தடுத்தனர். இதனால் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள படகுகள் வெளியே செல்ல முடியவில்லை. அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பதிவு செய்யப்படாத படகுகள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.