டாக்டர் வீட்டில் நகை கொள்ளை: தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை

டாக்டர் வீட்டில் நடந்த நகை கொள்ளை தொடர்பாக பெயிண்டிங் தொழிலாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-01-29 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரை சேர்ந்தவர் டாக்டர் வடிவேல் பண்டாரி (வயது 67). இவர் கிழக்கு கடற்கரை சாலையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 26–ந்தேதி கடலூரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட பின் இரவில் வீட்டிற்கு வந்த இவர் மனைவியுடன் தூங்க சென்றார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது பக்கத்து அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகை மற்றும் ரூ.2.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளை நடந்த வீட்டில் கதவு பூட்டுகள் எதுவும் உடைக்கப்படவில்லை. ஜன்னல் கதவு வழியாக கைகளை விட்டு கதவினை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

எனவே டாக்டர் வீட்டைப்பற்றி நன்கு அறிந்தவர்களே இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். சந்தேகத்தின் பேரில் டாக்டர் வீட்டில் வேலை பார்க்கும் பெண் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் டாக்டர் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலையும் சமீபத்தில் நடந்துள்ளது. அந்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கும் வீட்டை பற்றிய விவரம் தெரியும் என்பதால் அவர்களில் சிலரை பிடித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்