திருவாரூர் மாவட்டத்தில் 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்

திருவாரூர் மாவட்டத்தில் 90 சதவீத ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

Update: 2019-01-29 22:45 GMT
திருவாரூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்கள் முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசு பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்தநிலையில் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பும் படி தமிழக அரசும், ஐகோர்ட்டும் அறிவுரை வழங்கியது.

திருவாரூர் மாவட்டத்தில் 168 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் நேற்று காலை பணிக்கு திரும்பினர்.

ஆசிரியர்கள் வருகையால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர். இதனால் வழக்கம் போல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டன. இந்த பள்ளிகளில் 90 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் கூறினர். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் வழக்கம் போல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல நீடாமங்கலத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். அதனைத்தொடர்ந்து நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின. ஆதலால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்