குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு, பல்வேறு அரசுத் துறைகளுக்கு தேவைப்படும் இளநிலை உதவியாளர் முதல் உதவி கலெக்டர் வரை பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களை தேர்வு மூலம் நிரப்பி வருகிறது.

Update: 2019-01-29 12:24 GMT
இவற்றில் பெரும்பாலானவர்கள் எழுதும் தேர்வுகளாக குரூப்-4 மற்றும் குரூப்-2 தேர்வுகள் விளங்குகின்றன. பல்வேறு துறைகளில் ஏராளமான காலியிடங்கள் இந்த தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவது இதற்கு முக்கிய காரணமாகும். அதே வேளையில் டி.என்.பி. எஸ்.சி. நடத்தும் முக்கிய தேர்வுகளில் ஒன்று குரூப்-1 தேர்வு. தமிழக அரசின் உயர் பதவி களுக்கான தேர்வாக இது விளங்குகிறது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் உதவி கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு, வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற தமிழக அரசின் உயர் பதவிகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்ட தேர்வுகளாக இந்தத் தேர்வு நடைமுறை பின்பற்றப்படுகிறது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். உடற்தகுதியும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும்.

தற்போது குரூப்-1 பணிகளுக்கு 139 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் உள்ள பணியிடங்கள் எண்ணிக்கையை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். வருகிற 31-ந் தேதி வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சமூகத்தில் சிறந்த மதிப்பும், நல்ல ஊதியமும் பெற்றுத்தரும் குரூப்-1 பணியை பெறுவதில் இளைஞர்கள் மத்தியில் பெருங் கனவு உள்ளது. உங்கள் லட்சியத்தை வென்றுமுடிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில வெற்றி நடைமுறைகளை இங்கே பார்க்கலாம்...

விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் பற்றியும், தேர்வு முறை பற்றியும் முதலில் தெளிவாக அறிந்து கொண்டு தயாராக வேண்டும்.

குரூப்-1 தேர்வின் முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 200 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு பட்டப் படிப்பு தரத்தில் இருப்பதால் பள்ளிப் கல்லூரி பாடத்திட்டங்களுடன் பொதுவான தகவல் திரட்டுடன் தயாராவது நல்ல பலன் தரும்.

வினாக்களை ரீசனிங், குவான்டிடேடிவ், ஜெனரல் ஸ்டடி என 3 வகையாக பிரிக்கலாம். ஜெனரல் ஸ்டடியில் பாடத்திட்டங்கள் சார்ந்து மட்டுமல்லாமல், பொது அரசியல், நடப்பு நிகழ்வுகள், கலாச்சாரம், பொருளாதாரம் என எந்தத்துறை சார்ந்த கேள்வியும் கேட்கப்படலாம். எனவே அதற்கேற்ப பரந்த தயாரிப்புகள் தேவை.

ரீசனிங் மற்றும் குவான்டிடேடிவ் பகுதி வினாக்கள் பெரும்பாலும் கணிதம் மற்றும் சூழல் சார்ந்ததாக இருக்கும். விதவிதமான மாதிரிகளுக்கு விடைகண்டறிந்து பயிற்சி பெறுவது, எளிதில் விடையளிக்கவும், அதிக மதிப்பெண் பெறவும் துணை செய்யும்.

மெயின் தேர்வு தாள்-1, தாள் 2, தாள் 3 என பிரித்து நடத்தப்படுகிறது. இது தலா 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். நேர்காணல் 120 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.

மெயின் தேர்வில் வரலாறு, அரசியல், அறிவியல் மற்றும் பொது அறிவு, நடப்பு நிகழ்வு பகுதியில் நுட்பமான கேள்விகளும், கட்டுரை எழுதும் பகுதியும் இடம் பெறும். நேர்காணலில் மேலாண்மைப் பண்புகள் சோதிக்கப்படும்.

தேர்வுக்கான பாடத்திட்டங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பி.டி.எப். கோப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதை பதிவிறக்கம் செய்து படிப்பது நல்ல பலன் தரும்.

குரூப்-1 பாடத்திட்டங்கள் தொடர்பான புத்தகங்களையும் வாங்கிப்படித்து திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.

முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்வுகளின் வினாக்களை நன்கு பயிற்சி செய்வது சிறந்த பலன் தரும்.

பாடங்களை திரும்பத் திரும்ப படிப்பதுடன், தொடர்முயற்சி செய்வது அதிக மதிப்பெண் பெற்று வெயிட்டேஜ் முறையில் முன்னணி பெற துணை செய்யும்.

மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வு போல குறிப்பிட்ட முறைக்குமேல் எழுத முடியாது என்ற கட்டாயம் இல்லை என்பதால் வயதுவரம்பு இருக்கும் வரை மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற முயற்சி செய்யலாம்.

பல வழிகளில் தகவல்களை திரட்டுதல், புரிந்து படித்தல், கடினமான வினாக்களுக்கு எளிய வழிகளில் தீர்வு காணும் முறை, படித்ததை நினைவில் ஏற்றுதல், விடா முயற்சியுடன் படித்தல், மனதில் பாரம் ஏற்றாமல் மனஅழுத்தம் குறைத்து, போதிய ஓய்வு எடுத்து படித்தல், குழுவாக முயற்சி செய்தல், தகுந்த பயிற்சியாளர், உதவியாளரின் ஆலோசனைப்படி நடத்தல் என திட்டமிட்ட முயற்சி உங்களுக்கு வெற்றிக் கனியை எளிதாக பறிக்க உதவியாக இருக்கும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மேலும் செய்திகள்