கடந்த ஆண்டில் ரெயில் விபத்துகளில் சிக்கி 2,981 பேர் பலி அதிர்ச்சி தகவல்

மும்பையில் கடந்த ஆண்டில் ரெயில் விபத்துகளில் சிக்கி 2 ஆயிரத்து 981 பேர் பலியானதாக ரெயில்வே போலீசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

Update: 2019-01-28 22:34 GMT
மும்பை, 

மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர் நாடியாக உள்ளது. மத்திய, மேற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் தினமும் 80 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். தினமும் 2 ஆயிரம் ரெயில் சேவைகளுக்கு மேல் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஓடும் ரெயில்களில் இருந்து விழுந்து பயணிகள் அதிகளவில் உயிரிழக்கின்றனர்.

இதை தடுக்க 15 பெட்டி ரெயில்களை இயக்க ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

இதேபோல பொதுமக்கள் நடைமேம்பாலங்களை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் போதும் ரெயில் மோதி அதிகளவில் உயிரிழக்கின்றனர்.

2,981 பேர் பலி

இந்தநிலையில் கடந்த ஆண்டு மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி 2 ஆயிரத்து 981 பேர் பலியானதாக ரெயில்வே போலீசார் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலில் கூறப்பட்டுள்ளது.

இதில், குறிப்பாக பலியானவர்களில் 1,619 பேர் தண்டவாளத்தை கடந்து சென்றபோது, ரெயில் மோதி மரணம் அடைந்து உள்ளனர். 711 பேர் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளனர். இதேபோல பலியானவர்களில் 363 பேர் பெண்கள். 3 ஆயிரத்து 349 பேர் காயமடைந்து உள்ளனர்.

2017-ம் ஆண்டு மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி 3 ஆயிரத்து 14 பேர் உயிரிழந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்