பரேல் ரெயில் முனைய பணி 95 சதவீதம் நிறைவு அடுத்த மாதம் திறக்க வாய்ப்பு

பரேல் ரெயில் முனைய பணி 95 சதவீதம் நிறைவடைந்து விட்டன. எனவே புதிய ரெயில் முனையம் அடுத்த மாதம் திறக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-01-28 22:30 GMT
மும்பை,

மும்பையில் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்களின் சந்திப்பு ரெயில் நிலையமாக விளங்கும் தாதர் ரெயில் நிலையத்தில் திரளும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மும்பையின் முக்கிய வணிக பகுதிகளில் ஒன்றாக விளங்கும் பரேலுக்கு வந்து செல்லும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் பரேலில் புதிய ரெயில் முனையம் அமைக்க மத்திய ரெயில்வே நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி ரூ.51 கோடி செலவில் பரேலில் புதிய ரெயில் முனையத்துக்கான பணிகள் நடந்தன.

அடுத்த மாதம் திறக்க வாய்ப்பு

இந்தநிலையில் பரேல் ரெயில் நிலைய பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் இருப்பதாக மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது. இதுபற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பரேல் ரெயில் முனைய பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டன. எஞ்சிய 5 சதவீத பணிகளும் சில நாட்களில் முடிக்கப்பட்டு விடும்.

எனவே அடுத்த மாதமே(பிப்ரவரி) பரேல் ரெயில் முனையம் பயன்பாட்டுக்கு திறக்க வாய்ப்பு இருக்கிறது. இனி பரேலுக்கு வரும் பயணிகள் கூட்ட நெரிசல் மிகுந்த சி.எஸ்.எம்.டி. செல்லும் ரெயில்களில் ஏறுவதை தவிர்க்க முடியும். நேரடியாக இங்கேயே வந்து இறங்கலாம்.

பரேல் ரெயில் முனையத்தில் இருந்து தானே மற்றும் கல்யாணுக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்