திருவண்ணாமலையில் வியாபாரி வீட்டில் 10 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திருவண்ணாமலையில் பூ வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 41), பூ வியாபாரி. இவரது மனைவி யமுனா. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலையில் யமுனாவும், மகனும், மகளும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். பின்னர் ரவி வீட்டை பூட்டிவிட்டு பூ மார்க்கெட்டிற்கு சென்றுவிட்டார்.
பின்னர் மதியம் 1 மணி அளவில் ரவி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் பகுதியில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் மேசை டிராவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் பைனாஸ் கட்டுவதற்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகளை சேகரித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.