கலெக்டர் அலுவலகத்தில் 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பாலியல் புகார் கூறிய மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவியை தங்களுடன் அனுப்பக்கோரி தாய் உள்பட 3 பேர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-28 23:00 GMT
கோவை, 

கோவை காரமடை சிறுமுகை பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தனது பள்ளி ஆசிரியையிடம், தனக்கு உறவினர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை கோவை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியை தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பள்ளிக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில் மாணவியின் சித்தப்பா, பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் அந்த மாணவியிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டனர். மேலும் அந்த மாணவியை கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் மாணவியின் தாய், சித்தி, பாட்டி ஆகியோர் சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு சென்று மாணவியை தங்களுடன் அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் காப்பக நிர்வாகிகள் தங்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினால் மட்டுமே மாணவியை அனுப்பி வைக்க முடியும் என்று தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து அவர்கள் ஒரு பாட்டிலில் டீசல் வாங்கி கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது உடலில் டீசலை ஊற்ற முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த டீசல் நிரப்பப்பட்ட பாட்டிலை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 3 பேரும், காப்பகத்தில் இருக்கும் மாணவியை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினர். இதனைதொடர்ந்து அவர்கள் 3 பேரையும் ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்